மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பங்கேற்ற இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ் மாவட்டச் செயலர் ம. பிரதீபன் மற்றும் உயர்மட்ட குழுவினர் இன்று(12) நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதன் பின்னர் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தை செப்டம்பர் மாத இறுதியில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் போது கடைகளைப்பெற்றுக் கொண்ட வியாபாரிகள் பாதுகாப்பு, குடிநீர் உள்ளிட்ட தமது பிரச்சினைகள் பலவற்றை முன்வைத்தனர்.
இரண்டு வாரங்களுக்கு பிரச்சினைகளைத் தீர்த்து பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களின் கேள்விகளுக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் பதிலளித்தனர்.

