மன்னார் மாவட்டத்தில் கழிவு முகாமைத்துவத்தை வினைத்திறனாக மேற்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கருத்தாடல் கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கணகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் யுஎன்டிபி மன்னார் நிலப்பரப்புக்கான கள இணைப்பாளர் திருமதி. ஜெயவதனி மன்னார் மாவட்டத்தில் குறித்த திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் பற்றிய தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தார்.
மேலும் கூட்டத்தில் மன்னாரில் அதிகமான கழிவுகள் சேரும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் எவ்வாறு அகற்றப்படுகிறது. இடங்களை அடையாளம் காணுதல், அவற்றை அகற்றக்கூடிய நடவடிக்கைகளை மன்னார், பேசாலை, நானாட்டான் நகரசபை பிரதேச சபைகளின் செயலாளர்கள் சார்பில் உடனடியாக எடுக்கக் கூடிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் பாடசாலைகளில் சிறுவர்கள், இளையோர்கள், மகளிர் குழுக்கள் பங்களிப்புடன், கழிவு முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கம் செய்தல், புதிய தொழில்நுட்ப முறைகளை உட்புகுத்தல் என்பவை பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதே நேரம் இக்கழிவு முகாமைத்துவ வழிகாட்டலின் கீழ் திட்டக்குழுக்களை நியமித்து சிறந்த வேலைத்திட்டங்களை மன்னார் மாவட்டத்தில் முன்னெடுப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதுடன் எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் இத்திட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க மாவட்டத்தின் திணைக்களங்களின் ஒத்துழைப்பையும் ஏற்பாட்டுக் குழுவினர் கோரியிருந்தனர்.
மேலும் மாவட்ட செயலாளர் தலைமையில், மாவட்ட சூழலியல் அதிகாரசபை அதிகாரிகள், மாவட்ட பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்கள் இணைந்து மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை தயாரிக்க இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உப குழுக்களும் அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


