18ஆவது ஐபிஎல்; 14 ஓட்டங்களால் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி

டெல்ஹி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் நேற்று(29) இரவு பரபரப்பை ஏற்படுத்திய 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 48ஆவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை 14 ஓட்டங்களால் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி கொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களைக் குவித்தது.

முதல் 15 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஓட்ட வேகம் ஓவருக்கு 10 ஓட்டங்களுக்கு மேல் இருந்தபோதிலும் அதன் பின்னர் ஓட்ட வேகம் படிப்படியாக குறைந்தது. கடைசி 5 ஓவர்களில் அதன் ஓட்டவேகம் ஓவருக்கு 9ஆக இருந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 220 ஓட்டங்கள்வரை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் 3 விக்கெட்கள் உட்பட கடைசி 5 ஓவர்களில் 5 விக்கெட்கள் சரிந்ததால் அதன் மொத்த எண்ணிக்கை 204 ஓட்டங்களாக கட்டுப்படுத்தப்பட்டது.

முன்வரிசையில் ரஹ்மானுல்லா குர்பாஸ் (12 பந்துகளில் 26), சுனில் நரேன் (16 பந்துகளில் 27), அஜின்கியா ரஹானே (14 பந்துகளில் 26) ஆகியோர் ஓட்டவேகத்தை சிறப்பாக பேணினர்.

மத்திய வரிசையில் அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரின்கு சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ரகுவன்ஷி 32 பந்துகளில் 44 ஓட்டங்களையும் ரின்கு சிங் 25 பந்துகளில் 36 ஓட்டங்களையும் அண்ட்றே ரசல் 9 பந்துகளில் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

மிச்செல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் அனுக்குல் ரோய் விசுக்கி அடித்த பந்தை பவுண்டறி எல்லையில் துஷ்மன்த சமீர இடப்புறமாகத் தாவி எடுத்த மிக அருமையான பிடி பலத்த பாராட்டைப் பெற்றது.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விப்ராஜ் நிகம் 41 ஓட்டங்களுக்கு  2 விக்கெட்களையும்  துஷ்மன்த சமீர 46 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஏழாவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 60  ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு பவ் டு ப்ளெசிஸ், அணித் தலைவர் அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து உற்சாகத்தைக் கொடுத்தனர்.

அக்சார் பட்டேல் 43 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது கவனக்குறைவான அடி மூலம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பவ் டு ப்ளெசிஸ் 62 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மத்திய பின்வரிசையில் விப்ராஜ் நிகம் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 19 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் சுனில் நரேன் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *