தேசிய விளையாட்டு விழாவில் தங்கம் வென்ற நவக்க்ஷன் – சிறந்த வீரர் விருதும் வசம்!

விளையாட்டு அமைச்சினால் நடாத்தப்பட்ட 50ஆவது தேசிய விளையாட்டு விழா – 2026இல், அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இளம் கராத்தே வீரர் எஸ். நவக்க்ஷன் தங்கப் பதக்கம் வென்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கொழும்பு களனி பல்கலைக்கழக அரங்கில் அக்டோபர் 2,3,4,ல் கராத்தே போட்டியில் -84 கிலோ எடைப்பிரிவு குமித்தே (Kumite) போட்டியில் பங்கேற்று தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.

அத்துடன், இப்போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் 2026ஆம் ஆண்டுக்கான சிறந்த கராத்தே வீரர் (Best Fighter) விருதையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்ற தேசிய மட்டப் போட்டியில், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நவக்க்ஷன் பெற்றுள்ள இந்த வெற்றி, ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

கராத்தேயின் குமித்தே போட்டியில் வீரர்களின் வேகம், தாக்குதல் துல்லியம், தடுப்பு நுட்பம், உடல் வலிமை மற்றும் மன உறுதி உள்ளிட்ட பல்வேறு திறன்கள் சோதிக்கப்படுகின்றன. இத்தகைய தேசிய மட்டப் போட்டியில் -84 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

அத்துடன் குழுகாட்டா போட்டியில் பி.சறோன்சச்சின்,எஸ்.நவக்க்ஷன்,பி.மதன்ராஜ் ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வெற்றியின் பின்னணியில் அக்கரைப்பற்று ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் சிரேஷ்ட போதனாசிரியருமான சிகான் கே.ஹேந்திரமூர்த்தி மற்றும் அவரது பயிற்சிக்குழுவினரின் அர்ப்பணிப்பான பயிற்சியும் வழிகாட்டலும் இதற்கு முக்கிய பங்காற்றியுள்ளன.

தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் சிறந்த வீரர் விருதையும் ஒரே நேரத்தில் பெற்றுள்ள நவக்க்ஷனின் சாதனை, ஆலையடிவேம்பு மண்ணிலிருந்து தேசிய விளையாட்டுத் துறையில் உருவாகி வரும் இளம் திறமையாளருக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *