இலங்கையின் வரலாற்று வெற்றியைப் பாராட்டிய சங்கக்கார!

பவன், தசுன், ஜனித் மற்றும் அவிஷ்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்திறனால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெரிதும் கொண்டாடுவதற்கான உரிமை இலங்கை அணிக்கு உண்டு என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைப் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதேவேளையில், எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்காக அணியின் கவனம் தொடர்ந்து அதில் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலக்காகக் கொண்டு, அணியை வலுப்படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டங்களைச் செயற்படுத்த வேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, அணியை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வதற்காக இந்த வெற்றியிலிருந்து முறையான திட்டவட்டமான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்குவது அவசியமானது என்றும் குமார் சங்கக்கார தனது ‘X’ பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கீழ் நேற்று (22) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தி அசத்தியது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை, ஒரு பந்து மாத்திரம் (49.5 ஓவர்கள்) மீதமிருக்க, இலங்கை அணி துடுப்பாடி வெற்றிகரமாகக் கடந்து சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *