இந்திய நிதியுதவியில் காலியில் 22-வது மாதிரி கிராமம் திறப்பு!

இந்திய அரசின் நிதியுதவியுடன்  காலி மாவட்டத்தில் ‘திடுலா’  (Didula)   மாதிரி கிராமத்தில்  நிர்மானிக்கப்பட்ட  24 வீடுகள் நேற்று வியாழக்கிழமை (22) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்  டாக்டர் எச். எம். சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து, திறந்து வைத்து, பயனாளிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்த மாதிரி கிராம வீடமைப்புத் திட்டம், இந்திய அரசின் நிதியுதவியுடன், இலங்கையின் வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சகத்துடன் இணைந்து நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2017 அக்டோபரில் இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையே கையெழுத்தானது.

இத்திட்டத்தின் கீழ், இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட 600 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 24 வீடுகளைக் கொண்ட மாதிரி கிராமங்கள் அமைக்கப்படுகின்றன இதற்கான பயனாளிகள் அந்தந்த மாவட்ட வீடமைப்பு குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இவ்வாறு இந்தத் திட்டத்தின் கீழ், ஏற்கனவே மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, அனுராதபுரம், பதுளை, மாத்தளை, புத்தளம், கொழும்பு, திருகோணமலை, மொனராகலை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, இரத்தினபுரி, அம்பாறை, குருநாகல், கேகாலை, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய 21 மாவட்டங்களில் மாதிரி கிராமங்கள் திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் பணிகள் சுமார் 98.6 வீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று மாதிரி கிராமங்களும் விரைவில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்தத் திறப்பு விழாவில், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள், மற்றும் காலி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *