நாட்டில் அதிகரித்து வரும் சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒக்டோபர் 22ஆம் திகதி நாட்டை வந்தடைந்த எரிவாயுக் கப்பலுக்கு மேலதிகமாக, GOODWIL எனும் கப்பல் நேற்று (24) மேலும் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை இலங்கைக்குக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் நிலவும் அதிக தேவை மற்றும் நுகர்வோரின் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மற்றுமொரு எரிவாயுக் கப்பல் நாளை (26) இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 22ஆம் திகதி நாட்டை வந்தடைந்த 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவிலிருந்து பெறப்பட்ட 3 இலட்சத்து 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள், ஒக்டோபர் 23, 24 மற்றும் இன்று (25) ஆகிய தினங்களில் தொடர்ச்சியாக விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வீட்டு உபயோக எரிவாயுவின் போதிய இருப்பை உறுதிப்படுத்துவதுடன், விநியோக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதும் இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், எதிர்வரும் நாட்களில் நுகர்வோர் சந்தையில் எரிவாயு சிலிண்டர்களைத் தட்டுப்பாடின்றிப் பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

