முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்கியதில் உயிரிழந்த இளைஞரது உடலம் மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று(10) இரவு 11.00 மணியளவில் அவரது இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ள உடலம் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரின் இறுதிக்கிரியைகள் தற்போது இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று(11) பெருமளவான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், துரைராசா ரவிகரன் காதர் மஸ்தான், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தொழிலாளர், உறுப்பினர்கள், முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான மக்கள் இளைஞருக்கு அஞ்சலி செலுத்தினர்.


