வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற மழை வீழ்ச்சியானது தொடர்ச்சியாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், “தற்பொழுது குமரி கடலுக்கு அண்மித்ததாக நிலவுகின்ற காற்றுச் சுழற்சியின் விளைவாக நாட்டின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியான மழை கிடைத்து வருகின்றது.
எதிர்வரும் 23ஆம் திகதியளவில் வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கும் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலையில் மாதிரி கணிப்புகளின் அடிப்படையில் இந்த தாழமுக்கமானது ஒரு புயலாக வலுப்பெற்று அல்லது ஒரு வலு குறைந்த புயலாக வலுப் பெற்று இந்தியாவின் ஆந்திராவில் நெல்லூருக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் தற்போது நிலையில் உருவாகவுள்ள தாழமுக்கத்தால் நேரடியான பாதிப்பு இல்லாவிட்டாலும் கூட இக்காலப் பகுதியில் பல பிரதேசங்கள் கனமானது முதல் மிக கனமானது. மழையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
உருவாகவுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 23.10.2025 முதல் 28.10.2025 வரை வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
அதனால், மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கிழக்கு கடற்பகுதியில் பலநாள் கலங்களில் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்ற மீனவர்கள் 23.10.2025 க்கு முன்பதாக கரை திரும்புவது அவசியம்.
தொடர்ச்சியாக நவம்பர் மாதத்தின் முதல் வாரத்திலும் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
எனவே நவம்பர் 10ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை தொடரும்” – என அவர் மேலும் தெரிவித்தார்.

