மதீஷ பத்திரணவின் பந்து வீச்சு பாணியில் சற்று மாற்றம்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான மதீஷ பத்திரண இம்முறை ஐ.பி.எல். தொடரில் சோபிக்கத் தவறிவரும் நிலையில் அவரது பந்து வீச்சு பாணியில் சற்று மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சென்னை அணியின் பந்துவீச்சு ஆலோசகரான எரிக் சிமன்ஸும் குறிப்பிட்டுள்ளார்.

 

2023 இல் சென்னை அணி சம்பியன் கிண்ணத்தை வெல்வதில் அந்தத் தொடரின் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்திய பத்திரண முக்கிய பங்கு வகித்தார்.

 

கடந்த ஆண்டு உபாதை காரணமாக அவரால் சோபிக்க முடியாமல் போனது. இம்முறை அவர் ஆடிய முதல் எட்டு போட்டிகளில் 9 விக்கெட்டுகளையே வீழ்த்தினார்.

 

‘(அவரது) பந்துவீச்சு பாணியில் சற்று மாற்றம் ஏற்பட்டிருப்பது நன்றாக பதிவாகியுள்ளது’ என்று பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று முன்தினம்(30) நடந்த போட்டிக்குப் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பயிற்சியாளர் சிமன்ஸ் குறிப்பிட்டார்.

 

‘எனினும் அவர் பந்துவீசும் கை நிலையான அளவில் உயர்வதன் அடிப்படையில் அவர் தனது நிலைக்கு சற்று திரும்பியுள்ளார்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

சென்னை தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிலமிங்கும் முன்னதாக இதே கருத்தை வெளியிட்டிருந்தார். அவரது பந்துவீச்சு பாணியில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை இந்த ஆண்டு ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த எஸ்ஏ20 போட்டியில் காண முடிந்ததாகவும் இதற்கு இலங்கை காரணமாக இருக்கக் கூடும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

‘தென்னாபிரிக்காவில் பத்திரண தூரமாக விலகி இருந்தார். அவரது பந்துவீச்சு பாணியில் பிரச்சினை ஒன்று இருக்கிறது. அதற்கு இலங்கை கிரிக்கெட் காரணமாக இருக்கக் கூடும்’ என்று பிளமிங் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

 

‘என்றாலும் அவர் திறமைக்கு திரும்புவதற்கு முயன்று வருவதோடு அவரது சிறந்த பந்துவீச்சு பாணி மற்றும் அவர் நன்றாக திறமையை வெளிப்படுத்தும் நிலைக்கு திரும்ப கொண்டுவர முயன்று வருகிறோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

‘அவர் மிகத் தொலைவில் இல்லை, தென்னாபிரிக்காவில் இருந்தது தொடக்கம் இரண்டு மாதங்களில் நன்றாக முன்னேற்றம் பெற்றுள்ளார். அவர் தனது பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக அந்த முன்னேற்றத்தை தொடர்ந்து செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றும் பிளமிங் கூறினார்.

 

கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக வான்கடே அரங்கில் நடந்த போட்டி மதீஷவுக்கு மோசமான ஆட்டமாக அமைந்தது.

 

அவர் வெறுமனே 1.4 ஓவர்களில் விக்கெட் இன்றி 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

 

‘அவரது துல்லியம் குறைந்துவிட்டதாக எனக்குத் தெரியவில்லை. துடுப்பாட்ட வீரர்கள் அவருக்கு எதிராக மேலும் சிறப்பாக ஆடுகிறார்கள்.

 

அவருக்கு எதிராக துடுப்பாட்ட வீரர்கள் ஆடும் போக்கை எமக்கு தெளிவாக பார்க்க முடிகிறது. குறிப்பாக கடந்த போட்டியில் மும்பை பயன்படுத்திய தொழில்நுட்பம் அவரது திட்டத்தை தெரிந்திருக்கிறார்கள் என்பது புரிகிறது’ என்று சிமன்ஸ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *