இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை நிலைகொண்டிருந்த 1980-களின் பிற்பகுதியில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000-இற்கும் அதிகமென தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு மனித உரிமைக் குழு வெளிப்படுத்தியுள்ளது.
“1980-களின் இறுதி பகுதியில் 10,000-இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர்” என்ற தலைப்பில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் 15 மே 2026 அன்று வெளியிட்ட ஒரு புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வெறும் எண்ணிக்கையல்ல இல்லாமலாக்கப்பட்ட மனித உயிர்களின் பதிவாகும். இவர்களில்
பெரும்பாலானவர்கள் தமிழ் ஆண்களாவர் என அறிக்கை கூறுகிறது.
இலங்கை அரசாங்கத்துடனான இருதரப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழ் போராளிகளிடமிருந்து ஆயுதங்களை கலைவதற்காக இந்திய அமைதி காக்கும் படைய 1987 ஒக்டோபரில் இலங்கையில் நிலைநிறுத்தப்பட்டு, 1990 மார்ச் வரை நாட்டில் தங்கியிருந்தன.
இந்தக் காலகட்டத்தில், இலங்கை இராணுவம் முகாமுக்குள் முடக்கப்பட்டிருந்தது.
இந்தியப் படையினரும் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்களும் பல கூட்டுப்படுகொலைகள், கொலைகள், சட்டத்திற்கு முரணான படுகொலைகள், வலிந்த காணாமல் ஆக்கப்படுதல் போன்ற உட்பட பரவலானதும் திட்டமிட்டதுமான துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
பட்டியலிடப்பட்டவர்கள் அனைவருமே இந்தியப் படைகளாலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்களாலும் மட்டும் பாதிக்கப்பட்டவர்களல்ல என்றபோதிலும், இந்தத் தரவுகளின் தொகுப்பானது, இந்தியப்படைகள், அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள், மற்றும் இலங்கையின் தமிழ் ஆயுதக்குழுக்கள் உட்பட பல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான வன்முறைகளின் ஒரு அமைப்பு சார் வடிவத்தினை வெளிப்படுத்துகின்றது.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும், அதற்குப் பொறுப்புக்கூறல் இன்மையும் மறுக்கப்படமுடியாத ஒன்றாகும்.
இந்தத் தரவுத்தளம் அன்றைய காலப்பகுதியில் பெறப்பட்ட சத்தியப்பிரமாணங்கள், அரச சார்பற்ற
அமைப்புக்களின் அறிக்கைகள், குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட தகவல்கள், சரிபார்க்கப்பட்ட ஊடக அறிக்கைகள் ஆகியவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், சர்வதேச மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நியமங்களை நிவர்த்தி செய்யத்தக்க வகையிலும், அவற்றிற்கு அமைவாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதேசம், பாலினம், காலப்பகுதி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பெயர்களை தேடும் வகையிலும் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘முப்பது வருடங்கள் கடந்துவிட்டன, இனி கேள்வி என்ன நடந்தது என்பதல்ல. மாறாக எதற்காக யாரையும் பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கவில்லை – இன்னும் எத்தனை காலம்தான் தண்டனையின்மை நீடிக்க அனுமதிக்கப்படும் என்பதே கேள்வி” என சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

