முத்துராஜவெல, நீர்கொழும்பு களப்பு சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் !

முத்துராஜவெல, நீர்கொழும்பு களப்பு மற்றும் கம்பஹா மாவட்டம் சார்ந்த சுற்றாடல் பிரச்சினைகளைக் கண்டறிதல் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நேற்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

முத்துராஜவெல சதுப்புநிலப் பகுதிகள், பமுனுகம கடற்கரை பகுதிகளில் சூழல் மாசடைதல் மற்றும் சீதுவ லியனகேமுல்ல தொழிற்சாலைகள் சார்ந்த சிக்கல்கள் ஆகியவை தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, இப்பகுதிகளில் இடம்பெறும் சூழல் மாசடைதலைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

குறித்த சுற்றாடல் பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய குழுக்களை ஸ்தாபிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஆயர் ஜே. டி. அந்தனி, அருட்தந்தை சிரில் காமினி, அருட்தந்தை நிலந்த ஹேஷான், பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாஷண கமகே, ஸ்டெபனி பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜே. எம். விஜேபண்டார, சுற்றாடல் அமைச்சின் நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் கலாநிதி எம். ஜி. எம். பிரசன்ன, சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) டி. பி. சி. உதய குமார, சுற்றாடல் அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஐ. டப்லியூ. பி. சேனாரத்ன ஆகியோருடன் அரச அதிகாரிகள், கத்தோலிக்க அருட்தந்தைமார் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *