சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய 33 வயதுடைய பெண்ணொருவருக்கு போதைப்பொருள் கலந்த பானத்தை அருந்தக் கொடுத்து, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் 4ஆம் திகதி இலங்கைக்கு வந்த குறித்த பெண், வெளிநாட்டில் பணியாற்றிய தனது தோழி ஒருவரின் பொதியை புதுக்குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் ஒப்படைப்பதற்காக வாடகை வாகனத்தில் பயணித்துள்ளார்.
நவம்பர் 5ஆம் திகதி அதிகாலை தோழியின் வீட்டில் பொதியை ஒப்படைத்த பின்னர், மீண்டும் அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்தபோது, புதுக்குடியிருப்பு நகருக்கு அண்மையில் மேலும் இரு ஆண்கள் வாகனத்தில் ஏறியுள்ளனர்.
இதன்போது, அவர்கள் வழங்கிய பானத்தை அருந்திய பெண்ணுக்கு போதை ஏற்பட்டுள்ளதாகவும், பின்னர் ஆள்நடமாட்டமற்ற வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வாகன சாரதி உள்ளிட்ட மூவரால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பெண்ணிடமிருந்த பணம், தங்க ஆபரணங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், அவர் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள ஆள்நடமாட்டமற்ற பகுதியில் கைவிடப்பட்டுள்ளார்.
பின்னர் பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையின் மூலம் அவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி 13 இலட்சத்து 23 ஆயிரத்து 750 ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

