கோவிட்-19 காலப்பகுதியில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டபோது, இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடந்துகொண்ட விதம் கீழ்த்தரமானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் கவலையை வெளிப்படுத்தும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முன்வைக்கப்பட்ட யோசனையை அரசாங்கம் நிராகரித்தமை குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு எனக் குறிப்பிட்ட அவர், ஒரு உண்மையான நட்பின் அடையாளம் என்பது தவறுகள் இடம்பெறும்போது அவற்றைச் சுட்டிக்காட்டுவதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மியன்மாரில் வன்முறைகளுக்கு உள்ளாகி இலங்கைக்கு வந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு சர்வதேசப் பாதுகாப்பு மற்றும் உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

