அம்பாறையில் முதலாவது உயிர்காப்புப் படை உருவாக்கம்!

அம்பாறை மாவட்டத்தில் மனித உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் முதலாவது பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்த 30 பேர் கொண்ட உயிர்காப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது படையினருக்கான பயிற்சிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நேரடிக் கண்காணிப்பிலும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்களின் வழிகாட்டலிலும் இயங்கும் இக்குழு, அல் உஸ்வா முஸ்தபா மௌலவி அவர்களின் தலைமையில் கடந்த 2025.02.14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், சுமார் ஏழு மாத காலப் பயிற்சிகளை நிறைவு செய்து, 2026.03.01ஆம் திகதி 30 பேர் கொண்ட முதலாவது உயிர்காப்புப் படையாக உருவாக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, இரண்டாவது படையினருக்கான பயிற்சிகள் கடந்த 2026.08.22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளன.
இதேவேளை, இக்குழுவின் அடுத்தகட்ட விரிவாக்க நடவடிக்கையாக மூன்றாவது படையினரை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளன. இதற்கான விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.
அவசரகால மற்றும் அனர்த்தச் சூழ்நிலைகளின்போது மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கான திறன்களை இளைஞர்களிடையே வளர்ப்பதையும், சமூகத்திற்குத் தேவையான உயிர்காப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடக்கூடிய தொண்டர் படையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *