இறுதிப்போர் மனித உரிமை மீறல்: ஐ.நா. அறிக்கை வெளியீடு!

இலங்கையில் நடந்த உள்நாட்டு மோதலின் போதும் அதன் பின்னரும் மனிதாபிமான – மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான கொடூரத் தாக்குதல்களில் அரச பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்ததை ஏற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

‘‘I died many times’: Attacks on humanitarian assistance in Sri Lanka, 20 years on என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் ஊடாக, அரசாங்கத்தின் சார்பில் பகிரங்கமாக மன்னிப்புக் கோருமாறும், உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் தப்பியவர்களுக்கும் இழப்பீடு வழங்கி இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதவாறு உறுதிப்படுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நீண்டகாலக் கட்டுப்பாடுகள் 2006 ஆம் ஆண்டு முதல் தீவிரமடைந்ததாகவும், 2009 ஆம் ஆண்டின் இறுதி போரின் போது அது உக்கிரமான கட்டத்தை எட்டியதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அக்காலப்பகுதியில் நிவாரணப் பணியாளர்கள் கொலை செய்யப்பட்டனர்; உணவு எரிபொருள்இ மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் கடுமையாகக் மட்டுப்படுத்தப்பட்டது.

2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு மனிதாபிமானப் பணியாளராவது கொலை செய்யப்பட்டார் அல்லது பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும்இ தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ளவர்களை வெளியேற அனுமதிக்காமலும், பீரங்கி மற்றும் துப்பாக்கி வேட்டுகளுக்கு மத்தியில் மனிதாபிமானப் பணியாளர்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் அப்போதைய மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, இதுவரை பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படாத நான்கு முக்கிய சம்பவங்கள் குறித்துப் பகுப்பாய்வு செய்கிறது.

2006 ஆகஸ்ட் மாதம் மூதூரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பான ”Action contre la Faim – ACF” இன் உள்நாட்டு ஊழியர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்டமை (அக்காலத்தில் உலகளவில் மனிதாபிமானப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்), 2006 ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊழியர்கள் ஏழு பேர் காணாமல் ஆக்கப்பட்டமை, ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண வாகனத் தொடருக்கு இடையூறு விளைவித்து பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டமை ஆகிய சம்பவங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

மூதூர் படுகொலைகள் இடம்பெற்று இரு தசாப்தங்களின் பின்னரும், இலங்கையில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும், இந்த அறிக்கையில் ஆராயப்பட்ட எந்தவொரு பாரதூரமான வன்முறைச் சம்பவம் தொடர்பிலும் இதுவரை எவருக்கும் குற்றவியல் ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அறிக்கை வலியுறுத்துகிறது.

இவ்வாறு தண்டனையிலிருந்து விலக்களிப்பு தொடர்ந்தும் நீடிப்பது, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்கள் இயல்பானவையாக மாறுவதற்கும், ஏனைய இடங்களில் குற்றமிழைப்பவர்கள் ஊக்குவிக்கப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் இவ்வாறு நீண்டகாலம் தாமதமாவதற்கு ஏதுவாக உள்ள காரணங்களை அடையாளப்படுத்துகிறது அறிக்கை, உத்தியோகபூர்வ மறுப்புகள் மற்றும் பொறுப்பிலிருந்து நழுவுதல், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அவை தொடர்ச்சியாக முடங்குவது பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாக்கத் தவறுவது அத்துடன் குற்றவியல் விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடுப்புகளுக்குப் பதிலாகப் போதுமானதல்லாத மாற்றீடாக விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்தல் போன்ற காரணங்கள் இதற்குப் பங்களித்துள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறது.

பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்பு மற்றும் 2026 மே மாதத்தில் ஆறு விசாரணை ஆணைக்குழு அறிக்கைகள் வெளியிடப்பட்டமை ஆகியவற்றை அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், ஆராயப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் அல்லது வழக்குத் தாக்கல்களின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமைக்கான பகிரங்கச் சான்றுகள் இன்னும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைக்குள் சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில், வெளிநாட்டு எல்லை மற்றும் உலகளாவிய நீதிமுறை அதிகாரம் (extraterritorial and universal jurisdiction) தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடுகளின் கீழ் அல்லது விசாரணைகளை நடத்துவதற்கும் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் ஆதரவளிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் ஏனைய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *