மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி இன்று(11) காலை இடம்பெற்றது.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து குறித்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.
பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
மன்னாரில் மக்களின் வாழ்வியலைப் பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்து, எங்கள் மண்ணை சுடு காடாக்காதே, அடிக்காதே, அடிக்காதே எங்கள் வயிற்றில் அடிக்காதே பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு பேரணியில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் மன்னார் மக்கள் எதிர்நோக்கும் குறித்த இரு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க. கனகேஸ்வரனிடம் மன்னார் ஆயர் மற்றும் சர்வமத தலைவர்கள் இணைந்து மகஜரை கையளித்தனர்.



