வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல்முனைவின் பன்னிரண்டாவது நாள் கவனயீர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காண்கேணி பிரதேசத்தில் நேற்று(12) முன்னெடுக்கப்பட்டது.
“சமூகப் பிரச்சினைகளும் – சமஸ்டி முறையிலான தீர்வுகளும்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வடக்கு- கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் நிரந்தரத் தீர்வுகளுக்கான அரசியல் உரையாடலை உருவாக்கும் நோக்கில் இந்த 100 நாள் செயல் முனைவு நான்காவது வருடமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பிலான விடயங்கள் கிராமங்களூடாகவும் வெளிக்கொணரப்படும் நோக்கில் நேற்று இப்போராட்டம் கிராமத்திற்குள் உள்வாங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, “இலங்கை அரசே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை உறுதி செய்க!”, “சமஸ்டியே தீர்வு”, “எங்கள் வளம் எங்கள் உரிமை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் இக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இனவாதத்தில் சார்ந்திருந்த பழைய அரசுகளைப் போல் இல்லாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது நிலையானதும், கௌரவமானதும், உரிமைகளுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வுத் திட்டத்தை உடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.
இப் போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


