கண்டி – கலமுதுன கிராமத்தில் வீதி அமைக்கும் திட்டம் ஓராண்டுகாலம் ஒத்திவைப்பு

கண்டி, மினிப்பே பிரதேசத்தில் உள்ள கலமுதுன கிராமத்திற்கு வீதியொன்று அமைப்பதை விட, அந்த கிராம மக்களை வேறிடத்திற்கு இடமாற்றம் செய்வது பொருத்தம் என முன்வைக்கப்பட்ட  ஆலோசனையை கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு ஏற்றுக்கொண்டது.  அதன்படி, பாதை அமைப்புத் திட்டத்தை ஒரு வருடகாலத்துக்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் பின்தங்கிய கிராமமான கலமுதுன கிராமத்திற்கு போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதால் அதனை ஏற்படுத்திக் கொடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஒருவருட காலத்திற்கு ஒத்திவைக்கும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளை கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு ஏற்றுக்கொண்டது.

உடதும்பறை தொகுதியில் உள்ள மேற்படி கலமுதுன கிராமம் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமமாகும். சுமார் 6 கிலோ மீற்றர் தூரம் ஒற்றையடிப்பாதை மட்டுமே உள்ளது. எனவே அங்கு வாகனம் செல்லுமளவுக்கு பாதை அகலமாக்கப்பட  வேண்டும்  என நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக பல முறை மத்திய மாகாண சபை மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் போன்றவற்றில் எடுத்துக்காட்டப்பட்டு வந்தன. அங்கு பாதை அமைப்பிற்கான திட்டம் ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.எம். பசநாயக்கா முன்வைத்த கருத்தை சபை ஏற்றுக் கொண்டது.

அதன் அடிப்படையில், கலமுதுன கிராமத்தில் 36 குடும்பங்கள் மட்டுமே வசிப்பதாகவும் அவற்றில் 5 அல்லது 6 குடும்பங்களுக்கு மட்டுமே காணி நிலங்கள் இருப்பதாகவும் ஏனையவர்கள் அவர்களில் தங்கி வாழ்பவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் அங்கு மொத்தமாக 200 ஏக்கர்களுக்கும் குறைவான அளவு காணிகளே பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே சுமார் 6 கிலோ மீற்றர் தூரத்திற்கு பாதை அமைத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும்  ஏற்படுத்திக் கொடுக்கும் செலவை விட அவர்கள் வசிக்கும் பிரதேசத்தில் இருந்து உண்ணஸ்கிரிய நகர்ப் பக்கமாக கீழே அவர்களை நகர்த்தி அதற்கான காணிகளையும்  வீடமைப்பு  வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பது பொருத்தமானது என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். இதற்கு கிராம மக்களும் விருப்பம் தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சபையில் தெரிவித்தார்.

அவர்களை மலைக்கு மேலிருந்து கீழே இடமாற்றம் செய்தால் போக்குவரத்து, பாடசாலை, மின்சாரம்  உட்பட பல அடிப்படை வசதிகளை  புதிதாக ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய அவசியம் இருக்காது என்றும் அதற்கான வசதிகள் மலையின் கீழ்ப் பகுதியில் உள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் அரச காணிகள் கீழ்ப் பகுதியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான காரணங்களால் மாவட்ட அபிவிருத்திக் குழு மேற்படி ஆலோசணையை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *