யாழ்ப்பாணத்தின் மண்டைதீவில் யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கான திட்டம் முறையாக முன்னெடுக்கப்படுவதாகவும் இலங்கை கிரிக்கெட் தெரிவித்தது.
டித்வா சூறாவளி காரணமாக இந்த மைதானத்தின் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் இலங்கை கிரிக்கெட் தெரிவித்தது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி நடைபெறவிருந்த முதல் பரீட்சார்த்த கிரிக்கெட் ஆட்டத்தையும் திட்டமிடப்பட்ட பணிகளையும் தித்வா சூறாவளி சீர்குலைத்தது. தற்போது இதன் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தவுள்ள ரி20 2026 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டி நிறைவடைந்த பின்னர் பயிற்சி கிரிக்கெட் போட்டி நடத்தப்படும். திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் மைதானத்தின் கட்டுமானப் பணிகளை முடிப்பதில் நம்பிக்கையுடன் உள்ளோம்.
இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் 48 ஏக்கரில் அமைவதுடன், அதன் எல்லை நீளம் 80 மீற்றர்வரை நீடிக்கப்படும். யாழ்ப்பாணத்தில் மொத்தம் 138 ஏக்கர் பரப்பளவில் ஒரு விளையாட்டு நகரத்தை உருவாக்குவதற்காக இலங்கை கிரிக்கெட்டின் பரந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக இந்த மைதானத்தின் கட்டுமானம் உள்ளது.
வடக்கு மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதில் இந்த முயற்சி ஒரு முக்கியமான சாதனையாகும், மேலும் இது இலங்கை கிரிக்கெட்டின் தேசிய இலக்கை நிறைவு செய்வதாக அமைகிறது என தெரிவித்தது.

