மஸ்கெலியாவில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த ஒருவர் கைது

மஸ்கெலியாவில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த ஒரு சந்தேகநபர் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா – ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில் கால்வாய் அருகே சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் அடங்கிய குழு, குறித்த வனப்பகுதிக்குள் நுழைந்து, ஒன்றரை நாட்கள் அங்கேயே தங்கி கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபான தயாரிப்பு இடத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது, 210 லீற்றர் கசிப்பு அழிக்கப்பட்டதுடன், சந்தேகநபரால் தயாரிக்கப்பட்ட 1500 மில்லிலீற்றர் ஸ்பிரிட் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

குறித்த தோட்டத்திலேயே வசிக்கும் 69 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை பொலிஸ் பிணையில் விடுவித்து, அவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *