கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ரிவர் பார்க்கில் இடம்பெற்று வரும் “மின்னொளி கரப்பந்தாட்டப்” சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டிக்கு கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழக மூத்தோர், இளையோர் அணிகள் தெரிவாகியுள்ளன.
குறித்த சுற்றுத்தொடர் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் தாஹிர் தலைமையில் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் முபாறக், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் அல்ஹாஜ் மீராசாஹிப் ஹலால்தீன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கடந்த 05ம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றது.
பதிவு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட கழகங்கள் இப்போட்டிகளில் பங்கேற்கின்றன. இப்போட்டித்தொடர் தினமும் இரவு 7.00 மணி முதல் ஓட்டமாவடி ரிவர் பார்க் விளையாட்டு மைதானத்தில் தொடராக நடைபெற்று வருவதுடன், போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு நாளை(10) நடைபெறவுள்ளது.
இப்போட்டிகளில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் றியாஸ், பிரதேச செயலகங்களின் கணக்காளர் சஜ்ஜாத், சமூகச்செயற்பாட்டாளர் அஸீஸ் ஹாஜியார், கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழக உப தலைவர் சதாம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக நிருவாகிகள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் தொடராக கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த சுற்றுத்தொடரின் முதல் சுற்றில் தலா ஐந்து அணிகள் கொண்ட இரு குழுக்கள் பங்கு பற்றியதுடன், கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 40 வயதுக்கு மேற்பட்டோர் மூத்தோர் அணி இறுதிப்போட்டியில் வளர்பிறை விளையாட்டுக்கழக அணியையும் கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 40 வயதுக்கு கீழ்ப்பட்டோர் இளையோர் அணி மில்லத் விளையாட்டுக்கழக அணியையும் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.

