திஸ்ஸமஹாராமவில் ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனுமதியை வழங்குவதற்காக, 30 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று(09) 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீரப்பளித்தார்.
அத்துடன் 20 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறும் இந்த தண்டனை 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், பிரதிவாதியின் வாக்குரிமை உட்பட சிவில் உரிமைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இதனை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2015 மார்ச் 31 திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த நோயால் பாதிக்கப்பட்ட தனது ஏழு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசாங்கத்தின் நிதியுதவியைப் பெறுவதற்கான அனுமதியை பெறுவதற்காக 30 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரிடம் திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார்.
இதனையடுத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிடம் குறித்த தயார் அளித்த முறைப்பாட்டையடுத்து அவர்களின் ஆலோசனையின்படி அந்த பகுதியிள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்ற நிலையில் பிரதிவாதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ள நிலையில் இன்று நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதிவாதி அரச உத்தியோகத்தராக இருந்து கொண்டு, இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே இந்தக் குற்றத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, லேசான தண்டனை விதிக்க முடியாது.
எனவே அதன்படி இந்தத் தண்டனை விதிக்கப்படுவதாகவும். நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

