வனத்துறை நடவடிக்கைக்கு இடையூறு; 9 பேர் விளக்கமறியலில்

கிளிநொச்சி வனவளத்திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

 

நேற்று கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்கந்தபுரம் கண்ணகைபுரம் பகுதியில் கற்றாழை செய்கையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கும், அப்பகுதி இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

சம்பவ இடத்துக்கு சென்ற வனவளத்திணைக்கள அதிகாரிகளுடன் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் அழைக்கப்பட்ட நிலையில், மோதல் தீவிரமடைந்து 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் 9 பேரும் இன்று அக்கராயன்குளம் பொலிஸாரால் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

 

சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆஜராகினார்.

 

சம்பவத்தின் போது குறித்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்ததாகவும், அப்பகுதிக்குள் விசேட அதிரடிப்படையினரும் வனவளத்திணைக்கள அதிகாரிகளும் சென்றதையடுத்து மோதல் ஏற்பட்டதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதலில் சில விசேட அதிரடிப்படையினர் மற்றும் கற்றாழை உற்பத்தி நிலைய ஊழியர் ஒருவரும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில், 9 சந்தேகநபர்களையும் ஜூலை 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *