மனைவியின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படும் 41 வயதுடைய கணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீகஹவத்த, அங்கொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், கடந்த 18ஆம் திகதி மாலை முச்சக்கரவண்டியில் வந்து மனைவியின் தலையில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பலத்த தீக்காயமடைந்த பெண் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது முகம் மற்றும் மார்பு பகுதிகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லேரியா பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் (22) சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பெற்றோல் போத்தலும் முச்சக்கரவண்டியும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகவே இந்தச் செயலை மேற்கொண்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

