கிழக்கு மாகாணத்தில் தொழில்முனைவு, புதுமை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான இங்குபேசன் நிலையம் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியினால் நேற்று(04) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் கைத்தொழில் அமைச்சர் தொழில் முயற்சியாளர்கள் இங்குபேசன் நிலையத்தினை முழுமையாக உபயோகிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட வளாகத்தில் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் பி.பிரதீபன் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம்.நவவீயின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற நிகழ்வில் தொழில் முயற்ச்சியாளர்களின் எதிர்கால கனவை நனவாக்குவதற்கு தேவையான தொழில் நுட்ப அறிவை வழங்குவதற்கான நிலையமாக செயற்படவுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகமும் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் வலுவான பிராந்திய பொருளாதார வளர்ச்சி உயர்த்துவதற்கு பெறுமதி சேர் பொருட்களின் தரம் மற்றும் செயல்திறன் மதிப்பீடு, வணிகத் திட்ட வழிகாட்டுதல், சந்தை இணைப்பு உதவிகள், தயாரிப்பு சோதனைகள், பேக்கேஜிங் வழிகாட்டுதல், லேபிளிங் மற்றும் பிராண்டிங் ஆலோசனை வழங்கள், தொழில்முனைவோருக்கான பயிற்சி திட்டங்கள் போன்ற பல தரப்பட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களின் தரம் மற்றும் இரசாயண உள்ளடக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அதிகளவு பணம் செலுத்தி கொழும்பு போன்ற பிரதேசங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இவ் அரசாங்கத்தினால் 3வது இங்குபேசன் நிலையத்தினை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல மில்லியன் பெறுமதியான நவீன சாதனங்கள் மூலம் பல தரப்பட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளன.
மேலும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் இங்குபேசன் நிலையத்தினால் பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகள், தொடக்கநிலை நிறுவனங்கள், இளைஞர் தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SME) மேம்படுத்தும் மையமாக செயற்படவுள்ளதுடன் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு பாரிய சேவை வழங்கவுள்ளது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பேராசிரியர் கே.பிறேம்குமார்,விதாதா நிறுவனத்தின் பணிப்பாளர் மனோஜ் கருணாரத்ன, கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடாதிபதி டுலங்க மேனிக்கே குணுபோலகம, கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் அமரசிங்கம் பகீரதன், விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் உத்தியோகத்தர்கள், விதாதா நிறுவன உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

