மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலைய பிரதேசமட்டக் கண்காட்சியும் விற்பனையும் இன்று(10) கோரகல்லிமடு கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இதனை கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களமும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தியது.
கோறளைப்பற்று தெற்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் க. ரூபன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கோறளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி லோகினி விவேகானந்தராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.கோகுலராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விசேட அதிதியாக மட்டக்களப்பு கிராம அபிவிருத்தித் திணைக்கள சிரேஷ்ட தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி என். ரவிச்சந்திரன் கலந்து கொண்டார்.
இவர்களுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகளால் கண்காட்சிக் கூடம் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
அங்கு காட்சிக்கு வைக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களை பொதுமக்கள் பார்வையிட்டதுடன் கொள்வனவு செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோன்று பிரதான வீதி கோரகல்லிமடுவில் வாகை தையலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
முருக்கன் தீவு மற்றும் திகிலிவெட்டை பிரதேச மக்களின் நீண்டகால நீர்வழி போக்குவரத்தில் காணப்படும் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக திகிலிவெட்டை, முருங்கன் தீவு மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு படகு கொள்வனவிற்காக பிஎஸ்டிஜி வேலைத்திட்டத்தின் கீழ் இரு சங்கங்களுக்கும் தலா 5 இலட்சம் ரூபாவிற்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் பிரதேச மாதர் சங்க அமைப்புக்களுக்கு சுயதொழில் கடன் வழங்கி வைக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்கிய மாதர் சங்க பிரதிநிதிகளின் சேவையை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







