தற்காலிக இடங்களில் இயங்கி வந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கான புதிய நிரந்தரக் கட்டடம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபாலவால் இன்று(14) காலை 08.30 மணிக்கு உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் ஆரம்பத்தில் வருகை தந்த அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. பின்னர் புதிய பொலிஸ் நிலையக் கட்டடம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டதுடன், அதிதிகள் கட்டடத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டனர். மேலும், நினைவாக பொலிஸ் நிலைய வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் இதற்கு முன் கோப்பாய் இராசவீதியில் தனியார் வீடுகளில் இயங்கிய பொலிஸ் நிலையம் நிரந்தர இடத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு அவர்களது வீடுகளின் சாவிகள் அவர்களிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், பொலிஸ்மா அதிபர் திரு. பிரியந்த வீரசூர்யா, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக்க சிறிவர்த்தன, யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. சி.என்.மாரப்பன, யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. ஜெ. பி. எஸ். ஜயமக, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.பி.எம். ஆர். அம்பிட்டிய, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ்.கபிலன், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
புதிய நிரந்தரக் கட்டடத்தின் திறப்பின் மூலம், கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் நீண்டகால கட்டமைப்பு தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளதுடன், பிரதேச மக்களுக்கு மேலும் திறனுள்ள மற்றும் மேம்பட்ட பொலிஸ் சேவைகளை வழங்குவதற்கான புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது.

