வித்தியா கொலை வழக்கு; தீர்ப்பை யாழ் மேல் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது

யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகள் முன்னிலையில் வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற வித்தியா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஏழு பேருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்திருந்தது. அதனை எதிர்த்து அவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர்.
மேன்முறையீட்டு விசாரணையின் முடிவில், இரு குற்றச்சாட்டாளர்கள் விடுவிக்கப்பட்டதுடன், ஏனைய ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
எனினும், வழக்கு விசாரணை காலப்பகுதியில் ஒரு மரண தண்டனை கைதி நோய்வாய்ப்பட்டு சிறையில் உயிரிழந்தார். மேலும், அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த மற்றொரு கைதி சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது உயிருடன் உள்ள மூன்று குற்றவாளிகள் முன்னிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (15) வாசித்து உறுதிப்படுத்தியது.
அதேவேளை, உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்த இரு நபர்களையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக விடுதலை செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *