கரைச்சி பிரதேச சபையின் 2026.05.21 ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் பல முக்கிய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அவற்றில் ஒன்றாக, கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் பல முன்னாள் போராளிகள் கடந்த 16 ஆண்டுகளாக சொந்த காணி மற்றும் வீட்டு வசதி இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர்கள் திடீர் நோய்த் தாக்கங்களுக்கும் மரணங்களுக்கும் உள்ளாகி வருவதாகவும், புனர்வாழ்வு நிலையங்களில் தங்களது அனுமதியின்றி ஏதேனும் ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும், அதுவே தற்போதைய உடல்நலப் பாதிப்புகளுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகவும் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது.
தற்போது கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களாக உள்ள முன்னாள் போராளிகள் சிலர் இந்தப் பிரேரணையை முன்வைத்ததுடன், போராளிகள் நலன்புரிச் சங்கமும் இது தொடர்பாக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, முன்னாள் போராளிகளுக்கு ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் ஊசிகள் தொடர்பான உண்மைகளை மருத்துவப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியுமா என்பதையும் ஆராயுமாறு கோரப்பட்டது.
இந்தப் பிரேரணை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், வீட்டு வசதி இல்லாத மற்றும் நோய்வாய்ப்பட்ட முன்னாள் போராளிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான காணி மற்றும் வீட்டு வசதிகளைப் பெற்றுத்தருவதற்கும், தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. வட மாகாண ஆளுநரின் அனுமதியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதிவுகளை மேற்கொள்ள விரும்பும் முன்னாள் போராளிகள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களையோ அல்லது பிரதேச சபையையோ தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட சடல எரியூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மயானங்களில் இறந்தவர்களை எரியூட்டுதல் அல்லது நல்லடக்கம் செய்தல் தொடர்பாக பிரதேச சபையின் முன்அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டாசு கொளுத்தும் நடைமுறையில் புதிய ஒழுங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மரணம் நிகழ்ந்த வீட்டில் ஒருமுறையும், இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடத்தில் ஒருமுறையும் மட்டுமே பட்டாசு கொளுத்த அனுமதி வழங்கப்படும். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொது இடங்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பகுதிகளில் பட்டாசு கொளுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், இறுதிச் சடங்குகளின் போது இசைக்கப்படும் அமங்கல வாத்தியங்கள், சடலத்தை வீதிகள் வழியாக எடுத்துச் செல்லும் போது இடைநிறுத்தமின்றி இறந்தவரின் வீட்டிலிருந்து மயானம் வரை செல்ல வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மயானங்களில் காடாத்து உள்ளிட்ட சடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக காலை முதல் மாலை 7.00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதற்கு அப்பாற்பட்ட நேரங்களில் மயானத்துக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சடலத்தை எடுத்துச் செல்லும் வழித்தடத்திற்கும் முன்அனுமதி பெறப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இத்தீர்மானங்கள் அனைத்தும் சபையின் அதிகாரப்பூர்வ முடிவுகளின் அடிப்படையில் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

