ஆளணிப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்கள்

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை மற்றும் மல்லாவி ஆதார மருத்துவமனை ஆகியவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் அங்கு நிலவும் ஆளணிப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்கள் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று(18) நடைபெற்றன.

 

இந்தக் கூட்டங்களில் குறித்த மருத்துவமனைகளின் நோயாளர் நலன்புரிச் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றைத் தீர்ப்பதற்கான சாதகமான தீர்மானங்களும் எட்டப்பட்டன.

 

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை மேம்பாடு:

 

மானிப்பாய் பிரதேச மருத்துவமனையானது அதிகளவான நோயாளர்களுக்குச் சேவையாற்றி வரும் போதிலும், பல நீண்டகாலக் குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக அதன் நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

 

குறிப்பாக, தாதியர்கள், மருத்துவ ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள், சிற்றூழியர்கள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை, முழுமையான வசதிகளுடன்கூடிய வெளிநோயாளர் பிரிவு மற்றும் விடுதி வசதியின்மை ஆகியன இச்சங்கத்தின் கோரிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டன.

 

இது தொடர்பில் கூட்டத்தில் விளக்கமளித்த ஆளுநர், வடக்கு மாகாணத்திலுள்ள 33 பிரதேச மருத்துவமனைகளுக்குத் தாதியர்களுக்கான ஆளணி அனுமதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

 

இது குறித்து ஆளணி முகாமைத்துவச் சேவைகள் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அதனைச் சாதகமாகப் பரிசீலிப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

 

மானிப்பாய் மருத்துவமனையின் நோயாளர் உள்வருகையின் அடிப்படையில் தற்போது 6 தாதியர்களுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், இந்த மருத்துவமனை ‘சி’ தரத்திற்குரியதாக காணப்பட்ட போதிலும், அதற்கான முழுமையான வசதிகளுடன் இயங்கவில்லை. எனவே, முதலில் அத்தரத்திற்குரிய அனைத்து வசதிகளையும் வழங்கி மருத்துவமனையைச் சீராக இயங்கச் செய்த பின்னரே தரமுயர்த்துவது குறித்துச் சிந்திக்க முடியும். மேலும், தற்போதைய சூழ்நிலையில் இன்னொரு மருத்துவமனையிலிருந்து ஆளணியை எடுத்து இங்கு வழங்குவது அந்த மருத்துவமனையின் சேவையைப் பாதிக்கும் என்பதால், இதற்குத் தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர முடியும், எனத் தெரிவித்தார்.

 

மேலும், மருத்துவமனையின் கட்டடத் தேவைகளுக்காக நிரல் அமைச்சிடம் விசேட நிதி ஒதுக்கீட்டைக் கோருமாறு, கூட்டத்தில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராஜா அவர்களை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

 

இது தவிர, மருத்துவ ஆய்வுகூடத்துக்கான படிக்கட்டுக் கூரை, ஸ்கேனர், சி.சி.ரி.வி. மற்றும் சூரிய சக்திக் கட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தேவைகளும் இதன்போது பரிசீலிக்கப்பட்டன.

 

மல்லாவி ஆதார மருத்துவமனை மேம்பாடு:

 

மல்லாவி ஆதார மருத்துவமனையின் அவசர மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து அதன் நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் கூட்டத்தில் ஆராயப்பட்டன. குறிப்பாக, குருதி சுத்திகரிக்கும் பிரிவு விரிவாக்கப்படவுள்ளமையால் ஆய்வுகூடத்தைப் பிறிதோர் இடத்துக்கு நகர்த்துவதற்குத் தேவையான 8 மில்லியன் ரூபா நிதி மற்றும் ஆண், பெண் நோயாளர் விடுதிகளுக்கான நடைபாதை மேற்கூரை அமைப்பதற்கான 2.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படலாம் என ஆளுநர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

 

மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள் ஒருவரை நியமித்தல். வெளிநோயாளர் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் கூரை ஒழுக்குக் குறித்து மாகாணக் கட்டடங்கள் திணைக்களப் பொறியியலாளரின் மேற்பார்வை அறிக்கையைப் பெற்றுத் திருத்தங்களை மேற்கொள்ளல். புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள இரண்டு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு மத்திய அரசிடமிருந்து வரி விலக்கைப் பெற்றுக்கொள்ளல் ஆகிய விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டன.

 

இந்தக் கலந்துரையாடல்களில் நாடாளுமன்ற உறுப்பினரும் சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், மாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர், மேலதிகப் பணிப்பாளர் மற்றும் குறித்த மருத்துவமனைகளின் பொறுப்பு மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *