விசேட அதிரடிபடையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் உட்பட 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

குறித்த பகுதியில் இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர்.

 

அப்போது காட்டுப் பகுதியில் உழவு இயந்திரத்துடன் இருந்த ஒருவரை கைது செய்ய முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள் மற்றும் அயலவர்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சம்பவத்தின் போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொதுமக்கள் இரு தரப்பினரும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு சிறு குழந்தைகள், அவர்களது பெற்றோர், இரண்டு பாடசாலை மாணவிகள் மற்றும் முதியவர்களும் அடங்குவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *