மட்டக்களப்பு, ஜூலை 19 – மட்டக்களப்பில் விற்பனைக்கு இருந்த மோட்டார் சைக்கிள்களை வாங்குவதாகக் கூறி, ஓடிப் பார்த்து வருவதாக எடுத்துச் சென்று திருடிய 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இன்று (19) கைது செய்துள்ளனர்.
சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த குறித்த நபரிடமிருந்து திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபர் இரண்டு வாரங்களுக்கு முன்பு காத்தான்குடியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றுக்குச் சென்று, விற்பனைக்கு இருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகக் கூறி ஓடிப் பார்க்க அனுமதி பெற்று அதனை எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர், Ikman.lk இணையதளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு விளம்பரமிட்டிருந்த கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒருவரை தொடர்புகொண்டு, மட்டக்களப்பு–திருகோணமலை வீதியில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்கிற்கு அருகே வருமாறு அழைத்துள்ளார்.
அங்கு வந்த விற்பனையாளரிடம், காத்தான்குடியில் இருந்து கொண்டு வந்த மோட்டார் சைக்கிளை ஒப்படைத்து, அவரது மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்ப்பதாகக் கூறி எடுத்துச் சென்று, பின்னர் அதனை வாகரை பகுதியில் விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், 2023ஆம் ஆண்டிலும் இதேபோன்ற முறையில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடி விற்பனை செய்திருந்ததும் ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இதற்கு முன்னரும் 8 குற்றச்செயல்களுடன் தொடர்புடையவராக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

