மொழிப் பாலம் கலாசாரப் பரிமாற்றம்; கிண்ணியாவில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

திருகோணமலை மற்றும் கொழும்பு மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கிடையில் இன நல்லிணக்கத்தையும் மொழிப் புரிதலையும் ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட ‘மொழிப் பாலம்’ எனும் களப்பயணத் திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு (23) ஆம் திகதி கிண்ணியா பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

இதன்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம் ஹேமந்த குமார அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, களப்பயணப் பயிற்சியில் பங்கேற்ற இளைஞர், யுவதிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டு, திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் ஆதரவின் கீழ் கடந்த நான்கு நாட்களாக (20.07.2026 – 23.07.2026) இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் இல்யாஸ் மும்தஷ்ரின் என்பவரின் ஏற்பாட்டில் இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

இத்திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தின் மொறட்டுவை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து வருகை தந்த 25 சிங்கள மொழி இளைஞர், யுவதிகள் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மொழி பேசும் இளைஞர்களின் வீடுகளில் தங்கியிருந்தனர்.

 

இதன் மூலம் இரு சமூகங்களின் மொழி, கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறைகளைப் நேரடியாகப் பகிர்ந்துகொண்டதுடன், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் களப்பயணம் மேற்கொண்டு சமூகங்களுக்கிடையிலான மொழி ரீதியான உறவுப் பாலத்தையும் கட்டியெழுப்பினர்.

 

இந்நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி எம். மதுமதி,  கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி, மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *