காசாவில் இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் அங்கு பெண்கள் மற்றும் சிறுவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மேலும் 103க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே 19 மாதங்களாக நீடிக்கும் மோதல்களில் பாரிய மனிதாபிமான பேரழிவு ஒன்று இடம்பெற்றிருக்கும் நிலையில் இஸ்ரேல் மீண்டும் ஒரு முறை தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது சியோனிச துணை இராணுவக் குழுக்களால் 750,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட 77ஆவது நக்பா அல்லது பேரழிவு தினத்தை பலஸ்தீனர்கள் அனுஷ்டிக்கும் நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
தெற்கு நகரான கான் யூனிஸில் கடந்த புதன் இரவு தொடக்கம் இடம்பெற்று வரும் சரமாரி தாக்குதல்களில் குறைந்தது 59 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் குவிந்திருப்பதாகவும் அவர்களில் சிறுவர்கள் பலர் இருப்பதாகவும் நாசர் மருத்துவமனை ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காசாவின் வடக்கே காசா நகர் மற்றும் ஜபலியாவிலும் இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக கான் யூனிஸில் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி ஒன்பது வீடுகள் மீது நேரடி தாக்குதல்களை நடத்தி இருப்பதாக அங்குள்ள அல் ஜசீரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதில் ஒட்டுமொத்த குடும்பங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரவு முழுவதும் இஸ்ரேலின் செல் குண்டுகள் விழுந்தன’ என்று வடக்கு காசாவைச் சேர்ந்த 43 வயது ஆமிர் செல்ஹா ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். ‘மக்கள் மற்றும் கூடாரங்கள் நிரம்பியுள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் செல் குண்டுகளை நாள் முழுவதும் வீசியது’ என்று அவர் குறிப்பிட்டார்.
உயிரிழந்தவர்களில் ஹசன் சமூர் என்ற ஊடகவியலாளரும் உள்ளார். அவர் ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்படும் அக்ஸா வானொலியில் பணியாற்றுபவராவார். அவரது வீடு தாக்கப்பட்ட நிலையில் 11 குடும்ப உறுப்பினர்களுடன் அவர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காசாவில் இந்த புதிய தாக்குதல்கள் அங்கு மீண்டும் ஒருமுறை மக்கள் வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் மக்களை வெளியேறும்படி விடுத்த அவசர உத்தரவை அடுத்து காசா நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டு, கட்டாரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மறைமுக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் சூழலிலேயே காசாவில் தாக்குதல்கள் உக்கிரம் அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

