வட மாகாண ஆளுநரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

கௌதம புத்த பெருமானின் மூன்று புனித நிகழ்வுகளையும் — பிறப்பு, ஞானோதயம், பரிநிர்வாணம் — நினைவுகூரும் வெசாக் திருநாளை முன்னிட்டு, வட மாகாணத்தில் வாழும் அனைத்து பௌத்த சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பௌத்த தர்மம் என்பது காலத்தை வென்று நிலைத்திருக்கும் அமைதியின் போதனையாகும். அன்பு, கருணை, மகிழ்ச்சி மற்றும் சமநோக்கு என்ற நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டு, கௌதம புத்த பெருமானால் போதிக்கப்பட்ட இந்த தர்மம் இன்றும் உலகம் முழுவதிலும் வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது.

வட மாகாணம், பல்லின, பல்மத மக்கள் ஒன்றிணைந்து வாழும் சிறப்புமிக்க பூமியாகும். போரின் வடுக்களிலிருந்து மீண்டு, நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் நோக்கி நாம் பயணிக்கும் இவ்வேளையில், புத்த தர்மம் கற்றுத்தரும் அமைதி, மன்னிப்பு மற்றும் பரஸ்பர புரிதல் என்ற மதிப்பீடுகள் நம்மனைவருக்கும் இன்றியமையாத வழிகாட்டியாக அமைகின்றன.

வெசாக் திருநாள் என்பது ஒரு மத ரீதியான வைபவம் என்பதை தாண்டி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்களின் தனித்துவம், கூட்டுப்பொறுப்பு மற்றும் கலைநயமிக்க ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலாசார விழாவாகவும் விளங்குகிறது. தியானம், தர்ம போதனை, அண்ணதானம் மற்றும் பக்திப் பாடல்கள் போன்ற அலங்காரங்கள் இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிதலையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கு பெரும் பங்காற்றுகின்றன.

அனைத்து இனங்களுக்கிடையிலும் பரஸ்பர புரிதலையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் வெசாக் வைபவம் நல்லிணக்கத்தின் அடையாளமாகும். அகிம்சை, கருணை மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதான அன்பை அடிப்படையாகக் கொண்ட புத்த தர்மத்தின் விழுமியங்களை நமது வாழ்க்கையில் மேலும் இணைத்துக் கொள்ளுமாறு அனைவரையும் அழைப்பு விடுக்கிறேன்.

தர்மத்தின் குளிர்ச்சியால் அனைவரது மனங்களும் அமைதியடையும் உன்னத வெசாக் திருநாளாக இந்த நாள் அமைவதுடன், வட மாகாணம் மேலும் வளமடைந்து, ஒற்றுமையுடன் உயர்வடையும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *