இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் வெறுமனே அறிக்கைகளை வெளியிடாமல், அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் கடற்றொழில் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தான் கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வொன்றில் பங்கேற்ற இலங்கைப் பிரதிநிதிகள், மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அக்கறை காட்டவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுகின்ற போதிலும், அவற்றைச் செயற்படுத்துவதில் பின்னடைவைக் காட்டுவதாகவும் அவர் விமர்சித்தார். வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, இலங்கை அரசாங்கமும் குறித்த தீர்ப்பு தொடர்பில் தூதரகங்கள் உள்ளிட்ட முக்கிய தரப்புகளுக்கு அறிவித்து, நடைமுறை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
“கடற்றொழிலாளர்களுக்கு வெறுமனே அறிக்கைகள் எவ்விதப் பயனையும் அளிக்காது. பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் நடைமுறைச் செயற்பாடுகளே அவசியம்”என அவர் மேலும் தெரிவித்தார்.

