கோறளைப்பற்றில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட உலக சிறுவர் தின விழா – ஆய்வு நூலும் வெளியீடு!

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில், “திடமான உள்ளங்கள் வளமான சிறுவர்கள்” எனும் தொனிப்பொருளில் உலக சிறுவர் தின விழா 2026 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, கோறளைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளர் சுந்தரமூர்த்தி ராஜ்பாபு தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, World Vision Lanka திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று சிறுவர் சபையினால் தயாரிக்கப்பட்ட “அமைதி தேடும் சிறு உள்ளங்கள் – மன அழுத்தமும் அதன் பாதிப்பும்” எனும் ஆய்வு நூல் அதிதிகளினால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை மற்றும் கல்குடா சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுவர் இல்லங்களின் முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிரதேச சிறுவர் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் முன்பள்ளிச் சிறார்களின் ஆக்கத்திறன் நிகழ்வுகள், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களைச் சேர்ந்த சிறார்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிரதேச சிறுவர் சபை உறுப்பினர்களின் திறமை வெளிப்பாடுகள் இடம்பெற்றன.

மேலும், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், 30 மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர்.

சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி திரு. அழகரெட்ணம் அழகுராஜின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *