சம்பி சூறாவளி தாக்கம்: தைவானில் 931 விமானங்கள் ரத்து

தென் சீனக் கடல் மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் வானிலை மாற்றங்களுக்கு மத்தியில், சம்பி சூறாவளி தைவானை நெருங்கியதால் அங்கு அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சூறாவளியின் மையப்பகுதிக்கு அருகில் மணிக்கு சுமார் 191 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்குப் பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளன.

சம்பி சூறாவளி தாக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 94 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 1,300 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்

தைவானின் போக்குவரத்து அமைச்சகத் தகவலின்படி, இன்றைய தினத்திற்கான(23) 262 உள்நாட்டு விமானங்களும் 669 சர்வதேச விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, விமானங்கள் மீண்டும் இயங்கும் நேரம், மாற்றங்கள் குறித்து பயணிகள் தங்களது விமான நிறுவனங்களின் சமீபத்திய அறிவிப்புகளைச் சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பெரும்பாலான பகுதிகளில் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. நிதிச் சந்தைகளும் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பி சூறாவளி தைவானின் வடகிழக்குக் கரையை ஒட்டிச் சென்று, பின்னர் சீனக் கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து, தொடர்ந்து தெற்கு ஜப்பான் பகுதிகளைப் பாதிக்கக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *