கொழும்பு நகரில் காசநோய் (TB) பரவுவதற்கு அதிக சன நெரிசல், போதிய சுகாதார வசதிகளற்ற வீடுகள் மற்றும் சூரிய ஒளி புகாத வாழ்விடங்கள் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய வாய்மொழிக் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கொழும்பு நகரில் 2025ஆம் ஆண்டில் 968 காசநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவைக் காட்டுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
புள்ளிவிவரங்களின்படி, கொழும்பு நகரில் 2019ஆம் ஆண்டில் 871 காசநோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், 2020ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 736 ஆகக் குறைந்தது. பின்னர் 2021ஆம் ஆண்டில் 796 ஆக அதிகரித்தது.
2022ஆம் ஆண்டில் 1,093 பேரும், 2023ஆம் ஆண்டில் 1,130 பேரும் காசநோயால் பாதிக்கப்பட்டதாகப் பதிவாகினர். 2019 முதல் 2025 வரையான காலப்பகுதியில் பதிவான அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். தொடர்ந்து, 2024ஆம் ஆண்டில் 1,064 ஆகவும், 2025ஆம் ஆண்டில் 968 ஆகவும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டில் 2,264 காசநோயாளர்கள் பதிவாகியிருந்தனர். 2016ஆம் ஆண்டில் 2,156 பேரும், 2017ஆம் ஆண்டில் 2,051 பேரும், 2018ஆம் ஆண்டில் 2,088 பேரும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் பதிவாகும் காசநோய்ச் சம்பவங்களில் 25 சதவீதமானவை கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலேயே பதிவாகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
காசநோயால் பாதிக்கப்பட்ட சிலர் உரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெறத் தவறுவது, நோய் தொடர்ந்து பரவுவதற்கு வழிவகுப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனினும், நோயாளர்களுக்கு இலவச மருந்துகளும் பொருத்தமான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதுடன், நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடமாடும் சிகிச்சைச் சேவைகள் மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு நகரில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டிலிருந்து குறைந்து வருவதாகவும், 2025ஆம் ஆண்டில் மேலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

