இன்றைய வானிலை!

வங்காள விரிகுடாவின் வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் நிலவிய தாழமுக்கப் பிரதேசம், மேற்கு திசையை நோக்கி வடமேற்காக நகர்ந்து மேலும் வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதன்படி, குறித்த தாழமுக்கப் பிரதேசம் இன்று (25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை (26) காலை மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பை அண்மித்த பகுதியில் சூறாவளியாகவும் வலுப்பெறுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

இந்த வானிலைத் தொகுதியின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், குறித்த தொகுதியை நோக்கி ஈர்க்கப்படும் காற்றோட்டம் இலங்கையின் ஊடாக வீசுவதால், அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, மேல், சபரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

குறிப்பாக, இந்தப் பகுதிகளின் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

 

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *