கொட்டகலையில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களுக்கு மாதாந்தம் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்காக, கூப்பன் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்கக் கூட்டத்தில் இன்று (27) தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொட்டகலைப் பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு எரிவாயு சிலிண்டர் என்ற அடிப்படையில் கூப்பன்கள் வழங்கப்படவுள்ளன.
குறித்த கூப்பனை கிராம சேவை உத்தியோகத்தரிடம் உறுதிப்படுத்திய பின்னரே எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டபோது நடைமுறைப்படுத்தப்பட்ட கூப்பன் விநியோக முறையை மீண்டும் அறிமுகப்படுத்தி, அதன் ஊடாக எரிவாயு விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொட்டகலையில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், எரிவாயு விநியோக வரிசைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைத்து, அனைவருக்கும் சீரான முறையில் எரிவாயு கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கொட்டகலை கிராம சேவை உத்தியோகத்தர், கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதியிலுள்ள எரிவாயு விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.
பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு எரிவாயு விநியோகத்தில் சமத்துவத்தையும் ஒழுங்குமுறையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

