மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் MEDSCOPE 2026 மருத்துவக் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள MEDSCOPE 2026 மருத்துவக் கண்காட்சி,நேற்று (28) மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் மற்றும் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் முதலாவது பீடாதிபதி பேராசிரியர் கே. ஈ. கருணாகரன்  ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்துவைத்த மருத்துவக் கண்காட்சி நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்னால் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா, கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன், காத்தான்குடி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி எம்.எஸ்.எம்.ஜாபீர், வைத்தியகலாநிதி காந்தா நிறஞ்சன், கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி , கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள்,  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், முப்படை உயர் அதிகாரிகள், பல்கலைக்கழகத்தின் கல்விசாரா உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

“அறிவியல், புத்தாக்கம் மற்றும் சமூகப் பங்கேற்பின் ஊடாக சுகாதார முன்னேற்றத்தை இணைத்தல்” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சி, எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இரண்டாவது தடவையாகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியின் மூலம், மருத்துவம் மற்றும் சுகாதாரப் பராமரிப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன், சுகாதார அறிவியல், நோய்த் தடுப்பு, நோயறிதல் மற்றும் நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது, நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, இதயம் மற்றும் இரத்த நாளத் தொகுதி, சுவாசத் தொகுதி, செரிமானத் தொகுதி, இனப்பெருக்கச் சுகாதாரம், நாளமில்லாச் சுரப்பி நோய்கள், சிறுநீரக நோய்கள், தசை மற்றும் எலும்புத் தொகுதி, தோல் நோய்கள் மற்றும் இரத்தம் சார்ந்த நோய்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகள் தொடர்பான விளக்கக் காட்சிகள் இடம்பெறவுள்ளன.

மேலும், தொற்றுநோய்கள் மற்றும் தொற்றுத் தடுப்பு, சமூக சுகாதாரம், அவசர சிகிச்சை, அடிப்படை உயிர்காக்கும் முதலுதவி, விபத்துக் காயங்களுக்கான சிகிச்சை, அறுவைச் சிகிச்சை நுட்பங்கள், மயக்கவியல், கதிரியக்கவியல், மனநலம், தடயவியல் மருத்துவம், நோயாளிகளின் பாதுகாப்பு, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான காட்சிப்படுத்தல்களும் இடம்பெறவுள்ளன.

மருத்துவம் மற்றும் சுகாதாரப் பராமரிப்புத் துறைகள் தொடர்பான அறிவைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், அறிவியல் மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *