உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளை நேற்று (30) பதிவாகியுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளமான “பைனான்ஸ்” (Binance) இந்த மாபெரும் கொள்ளைக்கு உள்ளாகியுள்ளது.
இதன் மூலம் பைனான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 6.3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான டிஜிட்டல் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
பைனான்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளர் ஒருவரின் மடிக்கணினி (Laptop) ஹேக்கர் ஒருவரின் கைவசம் சிக்கியதை அடுத்தே இந்தத் திருட்டு ஆரம்பமாகியுள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, பைனான்ஸ் வலையமைப்பில் இருந்த பாதுகாப்பு இடைவெளிகள் ஊடாக ஹேக்கர்கள் அமைப்பினுள் ஊடுருவியுள்ளனர்.
இதையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பைனான்ஸ் நிறுவனம், டெதர் (Tether) உள்ளிட்ட ஏனைய கிரிப்டோகரன்சி நிறுவனங்களுடன் இணைந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையின் பயன்பாட்டை முடக்க நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், தனது வர்த்தகத் தளம் ஊடாகக் கிரிப்டோகரன்சியை வெளியே எடுக்கும் (withdrawals) சேவையையும் பைனான்ஸ் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியது.
இருப்பினும், பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ள பைனான்ஸ் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் அனைத்து வைப்புகளும் (deposits) பாதுகாப்பாக இருப்பதாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட ஒவ்வொரு இழப்பையும் நிறுவனமே ஈடுசெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்காக 6.3 பில்லியன் டொலர்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் டெங் தெரிவித்தார்.

