தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய காலத்தில் சுமார் 5 கோடியே 96 இலட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப்பிரிவால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு 4 இனால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சந்தேகநபர், கணினித் தரவுக் கட்டமைப்பில் போலியான தகவல்களை உள்ளீடு செய்து, 59,656,496 ரூபா 84 சதம் (ரூ. 59,656,496.84) பணத்தை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் நம்பிக்கை மோசடி மற்றும் குற்றவியல் தவறான கையாடலில் ஈடுபட்டதாகக் கூறி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதற்கமைய, 2026 ஒக்டோபர் 30ஆம் திகதி காலை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க அலகு அதிகாரிகளால் இந்த நிதி மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடைய, மாளிகாவத்தை பிரதேசத்தில் வசிப்பவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

