இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறையை மறுசீரமைத்து வலுப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் சுகாதார மறுசீரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீர் வள முகாமைத்துவம், குடிநீரின் பாதுகாப்பு, கழிவுநீர் முகாமைத்துவம், நீர் சேமிப்பு, நிதி நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளிட்ட துறைகள் மேம்படுத்தப்படவுள்ளன.
இத்திட்டத்தின் முதலாவது கட்டத்திற்கும் 100 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அது 2024ஆம் ஆண்டு நிறைவடைந்தது. தற்போது இரண்டாவது கட்டத்திற்கும் 100 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியில் 50 மில்லியன் டொலர் சலுகை அடிப்படையிலான கடனாகவும், ஏனைய 50 மில்லியன் டொலர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சாதாரண மூலதன வளங்களிலிருந்து வழங்கப்படும் கடனாகவும் உள்ளடங்குகின்றன.
இதற்கான கடன் ஒப்பந்தங்கள் இன்று (06) கொழும்பிலுள்ள பொதுத் திறைசேரியில் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் இலங்கைக்கான நாட்டுப் பணிப்பாளர் ஷனன் கவ்லினும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.

