ஈழத்தின் மூத்த கவிஞர் மஹாகவி உருத்திரமூர்த்தியின் புதல்வரும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற தமிழ்க் கவிஞருமான டாக்டர் ருத்ரமூர்த்தி சேரன் கனடாவில் காலமானார்.
ஈழத்தின் நவீன கவிதை உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்ற கவிஞர் சேரன், போர், இடப்பெயர்வு, அகதி வாழ்வு, மனித உரிமைகள் மற்றும் புலம்பெயர் மக்களின் அனுபவங்களைத் தனது கவிதைகளில் ஆழமாகப் பதிவு செய்தவர்.
இவர் எழுதிய இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல் வரி, எலும்புக்கூடுகளின் ஊர்வலம் உள்ளிட்ட பல கவிதை நூல்கள் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன.
அவரது படைப்புகள் சுமார் 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச இலக்கிய அரங்குகளிலும் கவனம் பெற்றுள்ளன.
கனடாவின் விண்ட்சர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், கவிதை மற்றும் இலக்கியத்துறைக்கு அப்பால் இனத்துவம், அடையாளம், குடிபெயர்வு மற்றும் புலம்பெயர் சமூகங்கள் தொடர்பான ஆய்வுகளிலும் முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
2006ஆம் ஆண்டு கனடாவின் Tamil Literary Garden கவிதை விருது, 2017ஆம் ஆண்டு சர்வதேச கவிதை விருது மற்றும் 2020ஆம் ஆண்டு ஆனந்த விகடன் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான ஆளுமையாக விளங்கிய கவிஞர் சேரனின் மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

