தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உளவள ஆலோசனை,பொறுப்புடன் செயற்படும் ஊடகங்கள் போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் சாரார் சமூகத்திற்கு மிகவும் அவசியமானவர்கள் என தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையத்தின் ஏற்பாட்டில், ஆலோசனை வழங்கலில் தொழில்முறை டிப்ளோமா மற்றும் ஊடகவியல் டிப்ளோமா ஆகிய பாடநெறிகளை நிறைவு செய்த 85 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (21) பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ்வருட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், 2018/2019 கல்வியாண்டில் ஆலோசனை வழங்கல் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த 48 மாணவர்களும், 2022ஃ2023 கல்வியாண்டில் ஊடகவியல் டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த 37 மாணவர்களுமாக மொத்தம் 85 பேர் தமது டிப்ளோமா சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பேராசிரியர் பாஸில் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது,
செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் உலகின் அனைத்து துறைகளிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
வேகமாக மாறிவரும் உலகில் வெறுமனே சான்றிதழ்களையும் பட்டங்களையும் பெற்றுக்கொள்வதுடன் நின்றுவிடாமல், காலத்தின் தேவைக்கேற்ப தொழில்சார் திறன்களையும் வளர்த்துக்கொள்வது அவசியம்.
எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத் துறைகளிலும் வெளிவாரிப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
பொருளாதார நெருக்கடிகள், வேலையின்மை, குடும்பப் பிரச்சினைகள்,சமூக மாற்றங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் எனப் பல்வேறு சவால்களை மனித சமூகம் எதிர்கொண்டு வரும் இக்காலகட்டத்தில், உளவள ஆலோசனை வழங்குநர்களும் பொறுப்புணர்வுள்ள ஊடகவியலாளர்களும் சமூகத்திற்கு மிகவும் அவசியமானவர்கள் ஆகும்.
தாம் பெற்றுக்கொண்ட அறிவையும் திறன்களையும் சமூகத்தின் நன்மைக்காகப் பயன்படுத்தி, உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகளாக டிப்ளோமாதாரர்கள் உருவாக வேண்டும்.
1995ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னணியை நோக்கினால், 2000ஆம் ஆண்டளவில் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையம் நிறுவப்பட்டதிலிருந்து இந்நிலையத்தின் ஊடாக இதுவரை ஏறத்தாழ 4000 பட்டதாரிகளும் 500க்கும் மேற்பட்ட டிப்ளோமாதாரர்களும் உருவாக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

