இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவ் (Sihasak Phuangketkeow) நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.
கண்டி அஸ்கிரி மகா விகாரையில் நடைபெறும் அரச கடின சீவர பூஜை புண்ணிய உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் அரச பிரதிநிதியாக சிஹாசக் புவாங்கெட்கியோவ் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த தாய்லாந்து பிரதிப் பிரதமரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் நீண்டகால கலாசார மற்றும் மத ரீதியான உறவுகளை நினைவுகூர்ந்தவாறு ஜனாதிபதியும் தாய்லாந்து பிரதிப் பிரதமரும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வரலாற்று ரீதியான மத மற்றும் கலாசார உறவுகள் இவ்வாறான இராஜதந்திர விஜயங்களின் மூலம் மேலும் வலுப்பெறும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.
தாய்லாந்து பிரதமரும் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பத்துடன் உள்ளதாக பிரதிப் பிரதமர் இதன்போது குறிப்பிட்டதுடன், அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெராவை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு வருகை தருமாறு தாய்லாந்து பிரதமருக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, விவசாயம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இரு நாட்டுத் தலைவர்களும் இதன்போது கலந்துரையாடினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா நடவடிக்கைகளை எளிதாக்குதல் மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தமொன்றும் இதன்போது தாய்லாந்து பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவ் மற்றும் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளினதும் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்கும், வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும் என தாய்லாந்து பிரதிப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
விசேடமாக விவசாயத் துறைக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க தாய்லாந்து தயாராக இருப்பதாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்காகச் செயற்பட முடியும் என்றும் தாய்லாந்து பிரதிப் பிரதமர் தெரிவித்தார்.
தாய்லாந்தில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. தமது நாட்டுப் பிரஜைகளை நடத்துவதைப் போன்றே வெளிநாட்டுத் தொழிலாளர்களையும் நடத்துவதாக வலியுறுத்திய தாய்லாந்து பிரதிப் பிரதமர், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தொடர்பில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என்றும் அது தொடர்பில் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தாய்லாந்து பிரதிப் பிரதமர்,அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனெவிரத்ன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமரி ரொட்ரிகோ ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
தாய்லாந்து அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Paitoon Mahapannaporn), வெளிவிவகார அமைச்சரின் செயலாளர் போர்ன்போங் கனித்தானோன் (Pornpong Kanittanon), தெற்காசிய, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் உராசா மொங்கோல்நவின் (Urasa Mongkolnavin), தகவல் பணிப்பாளர் நாயகம் ஜெய்தாய் உபகார்னிதிக்செட் (Jaithai Upakarnitikset), தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் கசெம்சன் தோங்சிரி (Kasemsan Thongsiri) மற்றும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் பணிப்பாளர் சடுடீ புங்பொங்டீ (Sadudee Pungpongdee) ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

