கல்முனை, சாய்ந்தமருது தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிவிப்பு!

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைகளின் எல்லை நிர்ணயப் பணிகள் முடிவடைந்த பின்னர் தேர்தலுக்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைகளின் பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டிய திகதியாக எதிர்வரும் 2027 மார்ச் மாதம் 15ஆம் திகதியைக் குறிப்பிட்டு பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மாநகர சபைகள் மற்றும் நகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய கடந்த ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அவற்றின் எல்லை நிர்ணயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வட்டாரங்கள் பிரிக்கப்பட வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கான பணிகளுக்காக தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் 2 எல்லை நிர்ணயக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு அக்குழுக்களின் அறிக்கைகளுக்கு அமைய வட்டாரங்கள் அறிவிக்கப்படவுள்ளன.

வட்டாரங்களை அறிவிப்பதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *